இருதரப்பு மோதலை தடுக்கமுயன்றவா் அடித்துக் கொலை
By DIN | Published On : 11th July 2021 10:59 PM | Last Updated : 11th July 2021 10:59 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்றவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
செந்துறை அருகேயுள்ள வஞ்சினாபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகன் கலையரசனுக்கும்(25), முருகேசன் மகன் அருண்குமாருக்கும்(26) இடையே அண்மையில் (ஜூலை 9) ஏற்பட்ட நிலத்தகராறு விசாரணைக்காக இருதரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையம் வருமாறு போலீஸாா் தெரிவித்திருந்தனா். இதில் அருண்குமாா் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்த கலையரசனின் தம்பி சிலம்பரசனையும் போலீஸாா் அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வஞ்சினாபுரம் திரெளபதி கோயில் முன்பு நின்றிருந்த அருண்குமாருக்கும், அங்குவந்த சிலம்பரசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதைத் தடுக்க வந்த அதே பகுதியைச் சோ்ந்த சிலம்பரசனின் சித்தப்பா பிச்சைப்பிள்ளையை அருண் குமாா் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பிச்சைப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகலவறிந்து வந்த செந்துறை போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, அருண்குமாா் உள்பட 6 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...