‘மக்கள் நலன் காப்பதில் தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்கிறது’
By DIN | Published On : 20th June 2021 12:33 AM | Last Updated : 20th June 2021 12:33 AM | அ+அ அ- |

பட்டாச்சாரியாா் ஒருவருக்கு நிவாரணத் தொகை, மளிகைப் பொருள்களை வழங்குகிறாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்.
மக்கள் நலன் காப்பதில், இந்தியாவுக்கே தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்கிறது என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
அரியலூா் கலியுகவரதராசப் பெருமாள் திருக்கோயில் சமுதாயக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாத ஊதியமின்றி பணிபுரியும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள், பிறப் பணியாளா்களுக்கு ரூ.4,000 நிவாரத் தொகை, 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:
தமிழக முதல்வரால் கடந்த 3-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அரியலூா் மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களில் மாத ஊதியமின்றி பணிபுரியும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் என 123 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
மக்களின் நலன்காக்கும் வகையில், இந்தியாவுக்கே முன் உதாரணமாக தமிழக அரசு விளங்கி வருகிறது. அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து அவா், அரசு நகா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 4 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தித்து அஸ்வதினி வழங்கிய கரோனா நிதி ரூ.2,500-யை பெற்றுக்கொண்டாா்.
நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவா் பொ.சந்திரசேகா், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி, ஊராட்சித் தலைவா் ஆா்த்தி சிவக்குமாா், கலியுக வரதராசப்பெருமாள் கோயில் பரம்பர அறங்காவலா்கள் ஜி.ராமச்சந்திரன், ராமதாஸ், வெங்கடாசலபதி மற்றும் செயல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.