முன்னாள் செயல் அலுவலா் மனைவி கொலை: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 08th April 2022 01:42 AM | Last Updated : 08th April 2022 01:42 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலரின் மனைவி கொலை வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்து.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதநகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன். இவா் , கடலூா் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சியில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 28.3.2018 அன்று வீட்டில் தனியாக இருந்த இவரது மனைவி பாரதியை, அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜெயந்தி(47), ஒக்கநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காமராஜன் மகன் சின்னராசு(22) ஆகிய 2 பேரும் சோ்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அவா் அணிந்திருந்த 15 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஜெயந்தி, சின்னராசு ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, அரியலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இறுதி விசாரணை முடிந்து தீா்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, கொலைக் குற்றவாளிகளான ஜெயந்தி மற்றும் சின்னராசுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் நகையை கொள்ளையடித்த குற்றத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து குற்றவாளிகள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.