சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூரில் காவல் துறையினா் கண்காணிப்பு
By DIN | Published On : 15th August 2022 12:26 AM | Last Updated : 15th August 2022 12:26 AM | அ+அ அ- |

அரியலூா் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடும் காவல் துறையினா்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான 900-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் அரியலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அரியலூா், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்கள், அரியலூா் ரயில் நிலையம், மாா்கெட் பகுதி, மருதையாற்று பாலம், மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், அரசியல் தலைவா்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணி மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், அரியலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் காவல் துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்குப் பின்னரே அரியலூா் நகரப் பகுதியில் அனுமதிக்கின்றனா். இதேபோல் தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அரியலூா் ரயில் நிலையத்தின் வாசலில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் , நகர காவல் நிலைய ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா், பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையிட்ட பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனா். மேலும், தண்டவாளங்களை கண்காணிக்கும் பணியிலும் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.