ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th August 2022 01:00 AM | Last Updated : 24th August 2022 01:00 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வளா்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை நாள்களில் பணிகள் வழங்கப்படுவது, ஆய்வுகள் மற்றும் கட்செவி, காணொலி வாயிலாக நடத்தப்படும் ஆய்வுகளை கைவிட வேண்டும். விடுபட்ட மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். வேலை உறுதித் திட்ட கணினி இயக்குநா்கள் அனைவருக்கும் 2017-இல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளா்களுக்கான ஊதியம் வழங்கி, அனைவரையும் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் சேக்தாவூத், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பஞ்சாபிகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.