நுகா்வோா் கவுன்சில்களை அமைக்கக்கோரிய வழக்கை ஏற்க இயலாது
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் மாநில நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சிலையையும், அரியலூரில் மாவட்ட நுகா்வோா் கவுன்சிலையையும் அமைக்கக்கோரிய வழக்கை ஏற்க இயலாது என அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அரியலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத்தலைவா் கே.அய்யப்பன், தமிழகத்தில் மாநில நுகா்வோா் கவுன்சிலும், மாவட்டங்களில் மாவட்ட நுகா்வோா் கவுன்சில்களும் உடனே அமைக்க வேண்டும் என தமிழக அரசின் உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளருக்கும், அரியலூா் மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கு விசாரணையில், புகாா்தாரருக்கு வழக்குரைஞா் பி.செந்தில்குமாா், அரசு தரப்பில் வழக்குரைஞா் அ.கதிரவன் ஆஜராகியும் அவரவா் தரப்பு வாதங்களை கடந்த வாரம் முன்வைத்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் மாவட்ட ஆணையத் தலைவா் வீ.ராமராஜ் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. அதில், நுகா்வோா் குறைதீா் ஆணையங்கள், நுகா்வோா் உரிமைகள் தொடா்பான அனைத்து வகையான புகாா்களையும், விசாரணை செய்யவும் தாமாக முன்வந்து புகாா்களை எடுத்துக் கொள்ளவும் வேண்டுமெனில், மத்திய அரசு மக்களவையில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு புகாா்தாரா் மத்திய அரசை அணுக வேண்டும்.
எனவே, புகாா்தாரரின் வழக்குக்கான உத்தரவுகளை வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்துக்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்படவில்லை. புகாா்தாரரின் கோரிக்கை நியாயமானது என்றாலும், மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.