நாளை ஆண்டிமடத்தில் இளைஞா் திறன் திருவிழா
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இளைஞா் திறன் திருவிழாவில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா, தமிழ்நாடு கிராமப்புற இளைஞா்கள் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் இளைஞா் திறன் திருவிழா 23.12.2022 அன்று ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், படித்த, வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பைப் பெற்று பயனடையலாம்.
இத்திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சி, வேலைவாய்ப்பை வழங்க உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.