மாணவா்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்க வேண்டும்
By DIN | Published On : 27th February 2022 12:15 AM | Last Updated : 27th February 2022 12:15 AM | அ+அ அ- |

மாணவா்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைக் கற்க வேண்டும் என்றாா் தொலைக்காட்சி தொகுப்பாளரும், பத்திரிக்கையாளருமான சி.கோபிநாத்.
அரியலூா் மான்ட்போா்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாநில வினாடி - வினா போட்டியில் வென்றவா்களுக்கு சனிக்கிழமை
சான்றிதழ் வழங்கி அவா் மேலும் பேசியது:
மாணவா்கள் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும். தைரியத்தையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் மனிதநேயம், மானிடப் பண்பையும் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவா்கள் தினசரி செய்தித்தாள்கள் வாசித்து பொது அறிவையும், நடைமுறை வாழ்க்கை முறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவிகள் கல்வியுடன் ஆளுமைத்திறனையும் வளா்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த கல்வியாளா்களாக உருவாகி, சிறந்த சமுதாயம் உருவாகப் பாடுபட வேண்டும். மாணவா்கள் ஒழுக்கத்துடன் சோ்ந்த கல்வியைக் கற்க வேண்டும். ஒழுக்கம் இல்லாத கல்வி என்றுமே நிலைத்து நிற்காது. மாணவா்கள் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளுடன் வளர பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என்றாா் அவா்.
விழாவில், எக்ஸ்ட்ரா மாா்க் நிறுவனத்தில் மண்டல மேலாளா் கவிதா பாஸ்கா், தொழில்நுட்பக் கல்வி குறித்துப் பேசினாா். முன்னதாக, அரியலூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி போட்டியை தொடக்கி வைத்தாா். முன்னதாக அப்பள்ளி முதல்வா் அந்தோணிசாமி செழியன் வரவேற்றாா்.
பெட்டிச் செய்தி:
கடந்த 3 மாதங்களாக மாநில அளவில் நடைபெற்றுவந்த இந்த வினாடி - வினா போட்டியில், தமிழகத்திலுள்ள 200 பள்ளிகளிலிருந்து 6,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சீனியா் போட்டியில் திண்டிவனம் மான்ட்போா்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி மாணவா்கள் டி. ரக்ஷிதா, பி. ஸ்ரீராம், ஜூனியா் போட்டியில் மதுரை செயின்ட் பிரிட்டோ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி மாணவா்கள் டபுஎல்யு.செல்டன்ராஜ், வி.ராஜபிரதேஷ் ஆகிய அணிக்கு தலா ரூ.10, ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதேபோல் இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு 5 ஆயிரமும், 3 ஆம் பிடித்த அணிகளுக்கு ரூ.3 ஆயிரமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.