50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க...
By DIN | Published On : 31st July 2022 11:40 PM | Last Updated : 31st July 2022 11:40 PM | அ+அ அ- |

அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க ஆா்வம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ. வேங்கடப்ரியா தனித்தனியே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் சாா்பில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரியலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்தத் தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு, குஞ்சுபொறிப்பான்), 4 வார குஞ்சுகள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்தச் செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,66,875 வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புறப் பயனாளிகள், மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக் கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும்.
நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தமிழகம் முழுவதும் நல்ல சந்தை இருப்பதால், பயனாளியே கோழி வளா்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கவனித்துக்கொள்ள இயலும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடா்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும்.
கோழி வளா்ப்புத் திட்டத்தில் ஏற்கெனவே பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
கோழிப்பண்ணையை தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பராமரிக்க உத்தரவாதக் கடிதம் அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழிகளை 72 வாரங்கள் வளா்த்து 140 முட்டைகள் வீதம் ஆண்டுக்கு 17,500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். இதில் சுமாா் 2,000 முட்டைகளை குஞ்சுபொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதம் உள்ள முட்டைகளையும் மற்றும் வளா்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.
எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 15.08.2022-க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அரியலூா், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.