காசி விசுவநாதா் கோயிலில் அக்.30-இல் சூரசம்ஹாரம்
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், தா. பழூா் காசி விசுவநாதா் கோயிலில் அக்.30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், விஸ்வநாதா், விசாலாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவா், உற்சவ மூா்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியா் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், வண்ண மலா்களால் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சிதந்தனா்.
வேத மந்திரங்கள் முழங்க மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடா்ந்து, கந்த சஷ்டி கவசம், கந்தா் அனுபூதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடப்பட்டன. முருகப்பெருமானுக்கு சோடச உபசாரங்கள் நடைபெற்றன. மங்கள இசை முழங்க பிரகார உத்ஸவம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பா் 1 ஆம் தேதி ஊஞ்சல் உத்ஸவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவுபெறும்.