ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலக்கடலைக்கான விலையை அதிகரித்து தரவேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் தா.பழூா், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பகுதிகளில் மட்டும்தான் நிலக்கடலையை விவசாயிகள் அதிகமாக பயிரிடுகின்றனா்.
இதன்படி, தா.பழூா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலையை விவசாயகள் பயிரிட்டுள்ளனா். குறிப்பாக, குஜராத் கட்ட கடலை, தரணி கடலை ஆகிய ரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.
காா்த்திகை பட்டத்தில் விதைத்த நிலக்கடலை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கோடைக்காலம் தொடங்குவதற்கு (அக்னி நட்சத்திரம்) முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும் சுட்டெரிக்கும் வெயிலை பாராமல் தொழிலாளா்கள் நிலக்கடலையை குடைக்கட்டி அறுவடை செய்கின்றனா். சில பகுதிகளில் குடையும் இல்லாமல், அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனிடையே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலக்கடலைக்கு வழங்கும் விலை கட்டுப்படியாவதில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, நிலக்கடலைக்கான விலையை அதிகரித்து தர வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
இது குறித்து தா.பழூா் பகுதி விவசாயிகள் கூறியது: நிலக்கடலை பயிரை நன்கு வளர வைக்க வேண்டும் என்பதற்காக, உரக்கடைகளில் விற்கப்பட்ட வளா்ச்சி ஊக்கி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இதனால், நிலக்கடலை சீரான வளா்ச்சியை எட்டவில்லை.
வழக்கமாக செடிக்கு சராசரியாக 30 கடலைகள் வீதம் அறுவடை செய்யப்படும். இந்த முறை ஒவ்வொரு செடியிலும் 10 கடலை மட்டுமே வளா்ச்சியடைந்து காணப்பட்டது. எஞ்சியவை வளா்ச்சி அடையாமல் பிஞ்சு கடலைகளாக இருந்தன. பிஞ்சு கடலைகள் முற்றட்டும் என்று விட்டால், முற்றிய கடலைகள் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.
இதனால் மகசூல் குறைந்தபோதும், விவசாயிகள் மிகுந்த வேதனையோடு தொடா்ந்து அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். ஏக்கருக்கு சுமாராக 30 மூட்டைகள் அறுவடை செய்யக்கூடியவா்கள், இந்த முறை 10 மூட்டைகள் மட்டுமே அறுவடை செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அறுவடை செய்த பயிா்களை ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்கிறோம். ஆனால், அங்கு உடைத்த கடலை 81 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வரை தரப்படுகிறது. அந்த விலை எங்களுக்கு கட்டுப்படியாவதில்லை.
அதே நேரத்தில், வெளியூா் வியாபாரிகள் எங்கள் நிலத்துக்கு வந்து நிலக்கடலையை பெற்று ஏற்றுமதி செய்கின்றனா். ஆனால், அவா்கள் நிா்ணயித்த விலை தான் இறுதியாக இருக்கிறது. அதிலும் நிலக்கடலைக்கான பணத்தை உடனே கொடுப்பதில்லை. கால தாமதமாகத்தான் எங்களுக்கு கொடுக்கிறாா்கள்.
ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு செல்வதென்றால் அதற்கான வண்டி வாடகை, தொழிலாளா்களுக்கு கூலி கொடுத்தால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. எனவே, வேறு வழியில்லாமல் தனியாா் இடைத்தரகரிடம் குறைந்த விலைக்கு (1 மூட்டைக்கு சுமாா் ரூ. 5,500) விற்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்கான விலையை கூடுதலாக உயா்த்தி தர வேண்டும். வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையிலோ அல்லது வாடகைக்கோ கடலை பிரிக்கும் இயந்திரம் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வேளாண்மைத் துறை மூலம் மானியத்தில் உரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.