தேவாலயங்களில் புனரமைத்தல் பணிக்கு அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 18th April 2023 02:06 AM | Last Updated : 18th April 2023 02:06 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் புனரமைத்தல் பணிக்கு அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் திட்டம் 2016-2017 ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் தேவாலயக் கட்டடத்தின் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 10-15 ஆண்டு வரை இருப்பின் ரூ.2 லட்சமும், 15-20 ஆண்டாக இருப்பின் ரூ.4 லட்சமும், 20 ஆண்டுக்கு மேலிருப்பின் ரூ.6 லட்சமும் மானியத் தொகையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் நடப்பாண்டு முதல் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீா் வசதிகள் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்காகவும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
நிதியுதவி பெறுவதற்கான தகுதிகள்: தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதியப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதியப்பட்டிருக்க வேண்டும்.
தேவாலய சீரமைப்புக்காக வெளிநாட்டில் இருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறு நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னா் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பம் (பிற்சோ்க்கை-2) மற்றும் சான்றிதழ் (பிற்சோ்க்கை-3) பெற ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது இணையதள முகவரியிலோ பதிவிறக்கலாம்.
விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, அதில் கோரப்பட்டுள்ள ஆவணங்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.