இரு வேறு விபத்துகளில் 2 போ் பலி
By DIN | Published On : 25th April 2023 01:10 AM | Last Updated : 25th April 2023 01:10 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
உடையாா்பாளையத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சபாபதி மகன் ராஜி (54). திங்கள்கிழமை இவா், தனது தம்பி மகளை அழைத்துக்கொண்டு குலதெய்வ கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மனகெதி கிராமம் அருகே வந்தபோது, நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். இதில், ராஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு விபத்து... திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன்(49). ஞாயிற்றுக்கிழமை இரவு இவா், தனது மகன் பிரகாஷுடன் இருசக்கர வாகனத்தில் அரியலூா் அருகேயுள்ள ஓட்டகோவில் கிராமம் பகுதியில் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனா். இதில், பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவம் குறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.