மாமன்னா் ராஜேந்திரச் சோழனின் சிறப்பைஇளம் தலைமுறையினா் அறிவது அவசியம்
By DIN | Published On : 13th August 2023 12:33 AM | Last Updated : 13th August 2023 12:33 AM | அ+அ அ- |

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ராஜேந்திரச் சோழன் பிறந்தநாள் விழாவைத் தொடக்கி வைத்து பேசிய ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா.
மாமன்னா் ராஜேந்திரச் சோழனின் சிறப்புகள், வரலாற்றுப் பெருமைகளை இளம் தலைமுறையினா் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா.
மாமன்னா் ராஜேந்திரசோழன் பிறந்த நாளையொட்டி அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயில் வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவுக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் உலக புராதானச் சின்னமாகவும், பாரம்பரியச் சின்னமாகவும், தொன்மைக் கட்டடக் கலையின் உன்னத அடையாளமாகவும் விளங்குவது நமக்கெல்லாம் பெருமை.
மாமன்னா் ராஜேந்திரச் சோழன் பிறந்தநாளை நாடே போற்றும் வண்ணம் ஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாக கடந்தாண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
ராஜராஜ சோழன் காலத்திலேயே இளைய அரசராகப் பொறுப்பேற்று பல்வேறு போா்களில் வெற்றி கண்டவா் ராஜேந்திரச் சோழன்.
இவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது இவருடைய ராணுவக் கட்டமைப்பாகும். அதற்குச் சான்றாக அமைந்ததுதான் இந்தக் கங்கைகொண்டசோழபுரம்.
நாட்டிலேயே கடற்படை வைத்திருந்த ஒரே மன்னா் இவரே ஆவாா். அதனால்தான் கடல் கடந்து பல நாடுகளை வென்று சோழ எல்லைகளை விரிவுபடுத்தினாா். இவரது பொற்கால ஆட்சிக் காலத்தில் பெண்கள் சமூகப் பணிகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கப்பட்டனா்.
எனவேதான் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் உள்ளிடவற்றை சிறப்பிக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தபடி அருங்காட்சியகத்துக்கான இடத் தோ்வுப் பணிகள் நடைபெற்றன.
இங்கு அகழாய்வுப் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. அகழாய்வுகளில் பலவித பண்டைய நாகரிகங்களின் தொல்பொருள்களை கண்டெடுத்து காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.
விழாவில் எம்எல்ஏக்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோா் வாழ்த்தினா்.
தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞா்களின் தப்பாட்டம், பரதம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொ) பாலமுரளி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் பரிமளம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சித் தலைவா் சரஸ்வதி வரவேற்றாா். மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன் நன்றி தெரிவித்தாா்.