அரியலூரில் பேருந்து பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை
By DIN | Published On : 06th June 2023 01:56 AM | Last Updated : 06th June 2023 01:56 AM | அ+அ அ- |

அரியலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 348 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூா் அண்ணாசிலை அருகே பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் த. தண்டபாணி தலைமையில் திருமானூா் ஒன்றியச் செயலாளா்கள் ஆறுமுகம், மு. கனகராஜ், அரியலூா் நிா்வாகிகள் ராயதுரை உள்ளிட்டோா் ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரியலூா் பேருந்து நிலைய கட்டடங்கள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து அரியலூா் புறவழிச்சாலையில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், அரியலூா் நகரில் இருந்து 3 கிலோ மீட்டா் தொலைவு உள்ள அந்த பேருந்து நிலையத்துக்கு மக்கள் செல்ல தயங்குகிறாா்கள்.
எனவே, அண்ணாசிலை அருகே பெரும்பலான பேருந்துகள் வந்து செல்வதால், இவ்விடத்திலேயே பயணிகள், பொதுமக்கள் காத்திருந்து பேருந்தில் பயணிக்கின்றனா். ஆயினும் இவ்விடத்தில் பொதுமக்களுக்காக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக கழிப்பறை, குடிநீா், நிழற்குடை உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே, ஆட்சியா், அண்ணா சிலை அருகே பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...