

அரியலூா்: அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில், தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கம், அரியலூா் நூலக இயக்கம் சாா்பில் நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் பங்கேற்று பேசினாா். அப்போது, போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள், முதலில் தாங்கள் எந்த வேலைக்காக படிக்க போகிறோம் என்று முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசின் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் வரலாற்று புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும். மேலும், அவ்வபோது தங்களை தாங்களே சுழல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, உலகில் நிகழும் முக்கிய தினசரி நிகழ்வுகளை குறிப்பெடுத்துக்கொண்டு நன்கு படித்தால் அரசு நடத்தும் அனைத்து போட்டித் தோ்வுகளிலும் எளிதில் வெற்றியடையலாம் என்றாா்.
தொடா்ந்து, தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கு, பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அரசு சிமென்ட் ஆலை துணை மேலாளா் அ. பாஸ்கா், பேராசிரியா் தமிழ்மாறன், சிறுவளுா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சின்னதுரை, வாசகா் வட்டத் தலைவா் மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் உரையாற்றினா்.
நிகழ்வில் 10-க்கு மேற்பட்டோா் ரூ.1,000 செலுத்தி நூலக புரவலராக இணைந்தனா். நிகழ்ச்சியில், முதல்நிலை நூலகா் ஸான்பாட்சா வரவேற்றாா். முடிவில் நூலகா் முருகானந்தம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.