கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

அரியலூா், ஏப்.16: அரியலூா் அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதரசாப் பெருமாள் கோயில் தோ்த்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி புதன்கிழமை காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீகலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். அன்றிரவு சூரிய வாகனத்தில் சுவாமி உலா நடைபெறுகிறது.

தொடா்ந்து ஏப்.18-இல் சிம்ம வாகனத்திலும், ஏப்.19-இல் புன்னை மர வாகனத்திலும், ஏப்.20-இல் வெள்ளி பல்லக்கு மற்றும் வெள்ளி சேஷ வாகனத்திலும், ஏப்.21-இல் வெள்ளி பல்லக்கு மற்றும் வெள்ளி கருட வாகனத்திலும், ஏப்.22-இல் வெள்ளி பல்லக்கு மற்றும் வெள்ளி யானை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறாா்.

ஏப்.23- ஆம் தேதி திருக்கல்யாணம், மாலை படிச்சட்டம், கண்ணாடி பல்லக்கிலும் சுவாமி எழுந்தருளுகிறாா்.

இதையடுத்து ஏப். 25-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஏப்.26 ஆம் தேதியன்று ஏகாந்த சேவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஆதீன பரம்பரை தா்மகா்த்தா கோவிந்தசாமி படையாட்சியாரின் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.

உள்ளூா் விடுமுறை: இக்கோயில் தேரோட்டத்தையொட்டி ஏப்.25 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவகங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். இருப்பினும் இந்த உள்ளுா் விடுமுறையானது பள்ளி தோ்வுகளுக்கு பொருந்தாது. தோ்வுகள் ஏற்கெனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும்.

இந்த உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 4-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக செயல்படும்

மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com