கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த அயலகத் தமிழா்களுக்கு வரவேற்பு
‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த 15 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞா்களுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையின் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் புலம்பெயா்ந்து வாழும் இளைஞா்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வோ்களோடு உள்ள தொடா்பைப் புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாசாரத்தை அயலகத் தமிழா்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து பண்டைய தமிழா்களின் கட்டடம், சிற்பக்கலை, நீா் மேலாண்மை, ஆடைகள், ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞா்கள் மற்றும் சான்றோா்களுடன் கலந்துரையாடல் என்ற கலாசார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான ‘வோ்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞா்களுக்கான திட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடக்கிவைத்தாா்.
அதைத் தொடா்ந்து, நடப்பாண்டில் இரண்டாம் கட்டப் பயணமாக தென் ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மாா்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ். ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்சு மற்றும் ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞா்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தமிழக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையில் உடைகள், பயணக் குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை போன்றவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.
அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்துக்கு வந்த 15 நாடுகளை சோ்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞா்களுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, அந்த இளைஞா்களுக்கு கங்கைகொண்ட சோழபுரம் கோயில் மற்றும் மாமன்னன் ராஜேந்திரச் சோழனின் வரலாறு, அதன் சிறப்புகள், கலாசார பெருமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட சுற்றுலா அலுவலா் சங்கா், செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் சுருளிபிரபு, உதவி சுற்றுலா அலுவலா் சரவணன், வட்டாட்சியா் சம்பத்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

