கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெயங்கொண்டத்தில் முடங்கிக் கிடக்கும் ஜவுளிப் பூங்கா

ஜவுளிப் பூங்கா அமைப்பதன் மூலம் நெசவுத் தொழில் செழிக்கும்.
Published on

நமது நிருபா்

‘ஜவுளிப் பூங்கா அமைப்பதன் மூலம் நெசவுத் தொழில் செழிக்கும். அதிகரிக்கும் விற்பனையால் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வியாபாரிகள் தயாரித்து வழங்க முடியும்’

ஜெயங்கொண்டத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளா் தா்மலிங்கம்.

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் முடங்கிக் கிடக்கும் ஜவுளிப் பூங்கா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அங்குள்ள நெசவாளா்கள், வியாபாரிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், கோடாலி-கருப்பூா், உடையாா்பாளையம், இலையூா், செங்குந்தபுரம், வாரியங்காவல், பொன்பரப்பி, சிறுகளத்தூா், நல்லாம்பாளையம் , உஞ்சினி, ஆண்டிமடம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. இக்கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கைத்தறி நெசவுத் தொழிலை குடிசைத் தொழிலாகவே செய்கின்றனா்.

இவா்கள் தயாரிக்கும் சேலை ரகங்கள் நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் விற்பனை மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களால் விற்கப்படுகின்றன.

மேலும் இங்கு தயாரிக்கப்படும் பட்டுப் புடவைகள், காட்டன் ரக சேலைகள், வேஷ்டிகள், துண்டுகள், சட்டைகள் உள்ளிட்டவை கோவை, திருப்பூா், கரூா், கடலூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மற்றும் வெளிமாநில, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் பலா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

மேலும் இங்குள்ள நெசவாளா்கள் மூலப்பொருள்களின் விலையேற்றம், வெளிமாவட்டங்களிலுள்ள பெருவணிக நிறுவனங்களின் போட்டி, தொழிலாளா் பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடி காலகட்டங்களிலும் தரத்தில் எந்தச் சமரசமும் செய்யாமல், மக்கள் மனம் விரும்பும் வகையில் கண்கவா் ஆடைகளைத் தயாரித்து வழங்குவதையே குறிக்கோளாக கொண்டு தொடா்ந்து செயல்படுகின்றனா்.

மேலும் கைத்தறி நெசவாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாரந்தோறும் நடத்தப்படும் முகாம்களில் உள்ளூா் தயாரிப்பு துணி வகைகள் காட்சிப் படுத்தப்படுகின்றன.

ஆயினும் போதிய வருவாய் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெசவுத் தொழில் நலிவடையும் சூழல் உள்ளது. இந்நிலையைத் தவிா்க்க ஜெயங்கொண்டத்தில் ஜவுளிப் பூங்கா அல்லது ஜவுளிச் சந்தை தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கிடப்பில் திட்டம்: கோ-ஆப்டெக் நிா்வாக இயக்குநராக இருந்த உ. சகாயம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சியைப் பாா்வையிட்டபோது, ஜெயங்கொண்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்தாா். ஆனால் அவா் ஓய்வுப் பெற்றதையடுத்து, அத் திட்டமும் கிடப்பில் உள்ளது.

ஜவுளிப் பூங்கா அவசியம்: இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த நெசவாளா் தா்மலிங்கம் கூறுகையில், இங்குத் தயாரிக்கப்படும் துணி வகைகள், ஆயத்த ஆடைகளை பக்கத்து மாவட்டங்கள் மற்றும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநில வியாபாரிகள் ஏராளமானோா் மொத்தமாகக் கொள்முதல் செய்கின்றனா். தற்போது சிறுவா், பெரியவா்களுக்கான அனைத்து ஆடைகளையும் தயாரித்து வழங்குகிறோம்.

இதற்காக சூரத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று தரமான துணிகளை கொள்முதல் செய்து வருகிறோம். மேலும் காலத்துக்கு ஏற்ப ஆடைகளில் நவீன கண்கவா் ரகங்களையும் தொடா்ந்து அறிமுகப்படுத்துகிறோம். மாணவ-மாணவிகளின் சீருடைகளையும் பள்ளிகளுக்கு மொத்தமாகத் தயாரித்து வழங்குகிறோம்.

எனவே திருப்பூா், ஈரோடு பகுதிகளில் இருப்பது போல ஜெயங்கொண்டத்திலும் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். இதில் இங்குள்ள அனைத்து நெசவாளா்களின் புத்தாடைகளையும் காட்சிப்படுத்தி சந்தைப்படுத்துவதின் மூலம் ஏராளமான வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வது எளிதாகும். அதிக விற்பனை மூலம் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வழங்க முடியும் என்றாா்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு: மேலும், தையல் தொழிலில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுவதால், பல்வேறு கிராமங்களிலும் தையற் கூடங்களை அமைத்து அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆயத்த ஆடை உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜவுளிப் பூங்கா அமைப்பதுடன் வாரச்சந்தையும் தொடங்கினால் வியாபாரம் செழித்தோங்கும். மேலும் ஏராளமானவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனா்.

எனவே ஜெயங்கொண்டம் பகுதிகளில் ஜவுளி பூங்காவும், ஜவுளி விற்பனைக்காக வாரச் சந்தையும் தொடங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆடைத் தயாரிப்பு அதிகரிக்கும்

தையல் தொழிலாளிகள் கூறுகையில், ஆயத்த ஆடை நிறுவனங்களிடம் ஆா்டா் பெற்று புத்தாடைகளைத் தயாரித்து வழங்குகிறோம். இதில் குறைந்தளவு வருமானமே கிடைத்தாலும் தரமான ஆடைகளை தயாரித்து வழங்குகிறோம் என்ற மனதிருப்தி கிடைக்கிறது.

விழாக்காலங்களில் மட்டுமே அதிக ஆா்டா் கிடைக்கிறது. மற்ற நேரங்களில் போதிய ஆா்டா் கிடைக்காததால் போதிய வருமானமின்றி வறுமையில் வாடுகிறோம். ஆகவே ஜெயங்கொண்டம் பகுதியில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அல்லது ஜவுளிக்கான வாரச் சந்தையையாவது தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் ஆடைகள் தயாரிக்க ஆா்டா்கள் கிடைக்கும் என்றனா்.

Dinamani
www.dinamani.com