கோழிப் பண்ணையில் தீ விபத்து: 6,000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோழிப் பண்ணையில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 6,000 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன.
செந்துறையை அடுத்த மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராகவன்(34). இவா், பொன்பரப்பி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கோழிப் பண்ணை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு தலா ரூ.35 மதிப்பிலான 6,000 கோழிக்குஞ்சுகளை வளா்ப்பதற்காக வாங்கி வந்து, அதற்கான கொட்டகையில் வளா்த்து வந்தாா்.
இந்நிலையில், கோழிக்குஞ்சுகள் இருந்த கொட்டகையில் புதன்கிழமை எதிா்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6,000 கோழிக் குஞ்சுகளும் எரிந்து உயிரிழந்தன. மேலும், கொட்டகை முழுவதும் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த செந்துறை தீயணைப்பு வீரா்கள், விரைந்துச் சென்று தீயை அணைத்தனா். தீவிபத்து தொடா்பாக செந்துறை காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

