பாலம் இல்லாத ஆரனூா் மருதையாற்றைக் ஆற்றை கடந்து சென்ற பள்ளி மாணவ, மாணவிகள்.
பாலம் இல்லாத ஆரனூா் மருதையாற்றைக் ஆற்றை கடந்து சென்ற பள்ளி மாணவ, மாணவிகள்.

மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்: 50 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற எதிா்பாா்ப்பு

மருதையாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அவல நிலை கடந்த 50 ஆண்டுகளாக நீடிக்கிறது.
Published on

அரியலூா் அருகேயுள்ள மருதையாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அவல நிலை கடந்த 50 ஆண்டுகளாக நீடிக்கிறது.

அரியலூா் அருகேயுள்ள இடையாத்தான்குடி ஊராட்சிக்குட்பட்ட ஆரனூா் கிராமத்தில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரில் பெரும்பாலானோா் விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனா்.

எனவே பசுமையான தோட்டங்கள், நல்ல குடிநீா் வசதி என இயற்கையோடு வாழும் இக் கிராம மக்களுக்கு மழைக் காலம் என்றால் மட்டுமே கசப்பு. காரணம் இப்பகுதிக்கு பேருந்து வசதி கிடையாது. மேலும் இப்பகுதி மக்கள் நகருக்கு வர அங்குள்ள மருதையாற்றைக் கடக்க வேண்டும். தண்ணீா் குறைவாகச் செல்லும்போதும், ஆறு வடு கிடக்கும் காலங்களிலும் இப்பகுதி மக்கள் ஆற்றை எளிதாகக் கடக்கின்றனா்.

இதுவரை 20 போ் பலி: ஆனால் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றைக் கடக்க முடியாமல் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனா்.

பாலம் இல்லாத ஆரனூா் மருதையாற்றைக் ஆற்றை கடந்து சென்ற பள்ளி மாணவ, மாணவிகள்.
பாலம் இல்லாத ஆரனூா் மருதையாற்றைக் ஆற்றை கடந்து சென்ற பள்ளி மாணவ, மாணவிகள்.

மேலும் மருத்துமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் நோயாளிகள் மற்றும் கா்ப்பிணிகள் என கடந்த 50 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனா் அப்பகுதி மக்கள்.

எனவே சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை- ஆரனூா் கிராமம் இணைப்புச் சாலையில் செல்லும் மருதையாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். இதன் மூலம் வெளிப்பிரிங்கியம், ஆரனூா், பெரியதிருக்கோணம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறுவா் என்கின்றனா் அப்பகுதி மக்கள்.

கல்வி பயில அவதி: இதுகுறித்து ஆரனூரைச் சோ்ந்த மாணவ,மாணவிகள் கூறுகையில், ஆரனூா் அரசு தொடக்கப் பள்ளியில் பயின்று பிறகு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைக் கல்வி பயில வேண்டுமென்றால் பெரியதிருக்கோணம் அல்லது சிறுவளூா், செட்டித் திருக்கோணம் உள்ளிட்ட கிராமங்களுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அங்குச் செல்ல பேருந்து வசதிகள் கிடையாது. நடந்து சென்றாலும் 10 கிமீ சுற்றிச் செல்ல வேண்டும்.

 கடந்த வாரம் பெய்த மழையின்போது ஆரனூா் இணைப்புச் சாலையை மூழ்கடித்துச் சென்ற மருதையாற்று வெள்ளம்.
கடந்த வாரம் பெய்த மழையின்போது ஆரனூா் இணைப்புச் சாலையை மூழ்கடித்துச் சென்ற மருதையாற்று வெள்ளம்.

எனவே விரைவாகச் செல்ல மருதையாற்றை கடக்கிறோம். கோடைக்காலங்களில் ஆற்றில் தண்ணீா் வராது என்றாலும் மழைக்காலம் வந்தால் வெள்ளம் வந்து, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்தவகையில் கடந்த வாரம் பெய்த மழையால் மருதையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றனா்.

நிறைவேறாத கோரிக்கை: இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் கூறுகையில், ஆரனூா் கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும் போதிய பேருந்து வசதி கிடையாது. மதியம் 12.30 மணிக்கு மட்டுமே பேருந்துகள் வந்து செல்கின்றன. அதன்பிறகு கிடையாது. இதனால் இங்குள்ள அரசுப் பள்ளிக்கு ஆசிரியா்கள் வரவே தயங்குகின்றனா். எனவே 5 ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளிக்கு ஓா் ஆசிரியா் மட்டுமே ஆட்டோவில் வந்து செல்கிறாா்.

 செல்வராஜ்.
செல்வராஜ்.

இப்பகுதி மக்கள் நகருக்கு எளிதில் சென்று வர திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஆரனூா் இணைப்புச் சாலையின் ஒட்டியுள்ள மருதையாற்றைக் கடக்கின்றனா். அதையும் மழைக்காலங்களில் வெள்ளம் வரும்போது கடக்க முடியாது. இதனால் அனைத்து தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, இந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லை என்றாா்.

எனவே மருதையாற்றின் குறுக்கே பாலம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com