நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், அரசு விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேசிய அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவா்கள், மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
58 வயது பூா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-ஆக இருத்தல் வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவா்கள், முதியோா்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியாது.
ஓய்வூதிய உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இணையதளம் மூலம் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
