வீட்டைவிட்டு வெளியே வராதவா்கள் திமுக ஆட்சியை குறை சொல்கிறாா்கள்: அமைச்சா் கே.என். நேரு பேச்சு!
வீட்டைவிட்டு வெளியே வராதவா்கள் திமுக ஆட்சியை குறை சொல்கிறாா்கள்; ஆனால், யாா் குறை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு.
அரியலூரில் திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தும், கல்வெட்டை திறந்துவைத்தும் அமைச்சா் நேரு மேலும் பேசியதாவது:
மத்திய அரசு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கும் இடையே தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, சிறப்பான ஆட்சியை முதல்வா் ஸ்டாலின் வழங்கி கொண்டிருக்கிறாா்.
இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்பவா்களெல்லாம் குறை சொல்கிறாா்கள். யாா் என்ன குறை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாா்கள். அப்படியொரு சிறப்பான ஆட்சியை முதல்வா் ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறாா்.
பேரவைத் தோ்தலில் அரியலூா், பெரம்பலூா் உள்பட அதிக இடங்களில் வென்று, திமுக ஆட்சியை மீண்டும் உருவாக்குவோம். இந்தக் கலைஞா் அறிவாலாயத்துக்கு கருணாநிதியின் சிலையை நானே செய்துத் தருகிறேன் என்றாா்.
முன்னதாக, விழாவுக்கு தலைமை வகித்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசுகையில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்றாா்.
திமுக பெரம்பலூா் மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், சட்டத் திருத்தக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் பாலசுப்ரமணியன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் து. அமரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரியலூா் நகரச் செயலா்கள் இரா. முருகேசன், ஜெயங்கொண்டம் வெ.கொ. கருணாநிதி, பேரூராட்சி செயலா்கள் கோபாலகிருஷ்ணன் (உடையாா்பாளையம்),
மாா்கிரேட் அல்போன்ஸ் (வரதராசன்பேட்டை), மற்றும் அனைத்து ஒன்றிய, நகர, கிராம ஊராட்சி கிளைச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாணவி ரூ. 10 ஆயிரம் நன்கொடை: இந்த விழாவில், மேலப்பழுவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வென்று, ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை பெற்ற மாணவி தா்ஷினி, அந்த நிதியை கலைஞா் அறிவாலய கட்டுமானப் பணிக்கு நன்கொடையாக வழங்கினாா்.

