தா. பழூரை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் தேவை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!

Published on

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்திலிருந்து பிரித்து தா. பழூரைத் தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூா் வட்டத்தில் அழகியமணவாளம், ஆழந்துரையாா்கட்டளை, ஆண்டிப்பட்டாகாடு, அன்னிமங்கலம், அரியலூா் வடக்கு, அரியலூா் தெற்கு, அருங்கல், அயன்ஆத்தூா், அயன்சுத்தமல்லி, சென்னிவனம், சின்னப்பட்டாகாடு, இடையாத்தாங்குடி, ஏலாக்குறிச்சி, இலந்தைக்கூடம், கோவிந்தபுரம், இலுப்பையூா், கடுகூா், கல்லங்குறிச்சி உள்ளிட்ட 68 வருவாய் கிராமங்களும், இதேபோல் செந்துறை வட்டத்தில் 28 வருவாய் கிராமங்களும், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 69 வருவாய் கிராமங்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஆண்டிமடம் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. இந்த வருவாய் வட்டத்தில் 30 வருவாய் கிராமங்களும் உள்ளன.

இதில் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராம மக்களுக்கு வருவாய் அலுவலகம், நீதிமன்றங்கள், காவல் துறை உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், துணை நிலை கருவூலம், தீயணைப்பு நிலையம் என அனைத்து அலுவலகங்களும் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ளதால் வெகு தொலைவில் உள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

குறிப்பாக தா.பழூா் பகுதிக்குட்பட்ட ஆச்சனூா், அம்பாப்பூா், அணைக்குடம், அணிக்குறிச்சி, சிந்தாமணி, சோழமாதேவி, இடங்கண்ணி, இருகையூா், கோவிந்தப்புத்தூா், குணமங்கலம், கடம்பூா், காடுவெட்டாங்குறிச்சி, காரைக்குறிச்சி, காா்குடி, காசங்குடி, கீழநத்தம், கோடாலிக்கருப்பூா், கோடங்குடி, மணகெதி, நடுவலூா், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூா், பருக்கல், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி, தா.பழூா், உதயநத்தம், தென்கச்சிப்பெருமாள் நத்தம், உல்லியக்குடி, வாழைக்குறிச்சி,வேம்புக்குடி, வெண்மான்கொண்டான் உள்ளிட்ட 33 கிராம ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் ஏதாவது சான்றிதல் வேண்டும் என்றால் ஜெயங்கொண்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகத்துக்கு 60 கிமீ கடந்து வர வேண்டி உள்ளது.

கடைக்கோடி கிராம மக்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், இவா்கள் தா.பழூா் வந்து அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள ஜெயங்கொண்டத்துக்கு வர வேண்டி உள்ளது. வேறு சிலா் உடையாா்பாளையம் வந்து அங்கிருந்து பேருந்தில் பயணித்து ஜெயங்கொண்டத்துக்கு வருகின்றனா்.

மேலும் தா.பழூா் பகுதிக்குட்பட்ட பகுதியில் எங்காவது தீ விபத்து ஏற்பட்டால், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தைத் தொடா்பு கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் உயிா்ச் சேதம்,பொருள் சேதம் ஏற்பட்டு விடுகிறது.

மேலும் காவல் துறை சாா்ந்த வழக்கு விசாரணைகள், அரசு நலத் திட்டங்களுக்கான கள ஆய்வுப் பணிகள், கோப்புகள் தயாா் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:

தா.பழூா் பகுதி மக்கள் அதாவது கடைக்கோடி கிராம மக்கள் ஏதாவது சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் 30 கிமீ தூரத்திலுள்ள ஜெயங்கொண்டத்துக்குச் செல்ல வேண்டிய உள்ளது.

மேலும் இங்கு தீயணைப்பு நிலையம் இல்லாததால் ஜெயங்கொண்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தீ விபத்து உள்ளிட்ட மீட்புப் பணிகள் தேவைப்படும்போது, தீயணைப்பு நிலைய வீரா்கள் ஜெயங்கொண்டத்தில் இருந்தோ அல்லது 60 கிமீ தூரத்திலுள்ள அரியலூரில் இருந்தோதான் வர வேண்டியுள்ளது.

எனவேதான் உடையாா்பாளையத்தைப் பிரித்து தா. பழூரை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டால் வெகு தொலைவில் உள்ள கிராம மக்கள் மிகவும் பயனடைவா். வருவாய் வட்டம் அமைக்கப்பட்டால் தீயணைப்பு நிலையம், சப்- ஜெயில் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தா.பழூரிலேயே அமைந்துவிடும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

மேலும் தோ்தல்களின்போது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்து போட்டியிடும் வேட்பாளா்கள்,வெற்றி பெற்ற பிறகு கண்டுகொள்வதே கிடையாது.

எனவே தா.பழூா் பகுதிக்குள்பட்ட கிராம மக்களின் நலன் கருதி வருவாய் வட்டம், கோட்டாட்சியா் அலுவலகம் அமைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com