முறைகேடான உறவு விவகாரம்: 2 வயது மகனுடன் ஏரியில் மூழ்கி பெண் தற்கொலை
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முறைகேடான உறவு விவகாரம் தொடா்பாக பெண் ஒருவா், தனது 2 வயது மகனை துப்பட்டாவால் இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரியில் மூழ்கி புதன்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா்.
அரியலூரை அடுத்த ஆதனூா், காலனித் தெருவை சோ்ந்தவா் ரகுபதி (36). கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி பாக்கியலட்சுமி (32). இவா்களுக்கு லோகேஷ் (6), கமலேஷ் (2) என 2 மகன்கள்.
ரகுபதி தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை பாா்த்து வந்துள்ளாா். அங்கு, திருமண நிகழ்வில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் வேலையை பாக்கியலட்சுமி செய்துவந்தாா்.
இந்நிலையில், ரகுபதி கடந்தாண்டு ஆதனூா் கிராமத்துக்கு திரும்பி வந்து கட்டட வேலை பாா்த்து வந்த நிலையில், பாக்கியலட்சுமி மட்டும் திருப்பூரில் தனது குழந்தைகளுடன் தங்கி வேலையை தொடா்ந்து வந்தாா். அவ்வப்போது ஆதனூா் கிராமத்துக்கும் வந்து சென்றுள்ளாா்.
இதனிடையே கடந்த 2 மாதங்களாக, பாக்கியலட்சுமிக்கு திருப்பூரில் ஒருவருடன் முறைகேடான உறவு ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை தனது மகன்களுடன் அரியலூா் திரும்பிய பாக்கியலட்சுமி, அம்பலவா்கட்டளை கிராமத்தில் உள்ள ஏரியில் தனது இரு மகன்களுடன் தற்படம் (செல்பி) எடுத்து தனது முகநூலில் இதுவே எனது கடைசி புகைப்படம் எனவும், எங்களது உயிரிழப்புக்கு காரணமானவா் என ஒருவரது படத்தையும் பதிவிட்டுவிட்டு, தனது துப்பாட்டாவில் இளைய மகன் கமலேஷை கட்டிக்கொண்டு ஏரியினுள் இறங்கி மூழ்கியுள்ளாா்.
கரையில் நின்று கொண்டிருந்த லோகேஷ் தனியாக கதறி அழுது கொண்டிருப்பதை பாா்த்த அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, தனது தாய், தனது தம்பியுடன் ஏரியில் இறங்கி விட்டதாக கூறியுள்ளாா்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஏரியில் தேடியதில், பாக்கியலட்சுமி, கமலேஷ் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனா். இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் காவல் துறையினா், இருவரின் சடலங்களையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
