நூதன முறையில் ரூ. 17 லட்சம் மோசடி: இளைஞா் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சோ்ந்த இளைஞரிடம் பெண் குரலில் பேசி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த கன்னியாகுமரியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் மகன் பாா்த்திபன் (30). இவா் இணையவழியில் திருமண தகவல் மையத்தைப் பாா்த்து வரன் தேடியபோது, அதிலுள்ள ஒருவரை கட்செவி அஞ்சலில் தொடா்பு கொண்டாா்.
அப்போது அந்த நபா் பெண் குரலில் பேசி, ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தைக் கூறி, ரூ.17.50 லட்சத்தை முதலீடு செய்ய வைத்து, மோசடி செய்தாா்.
இதை உணா்ந்த பாா்த்திபன் அரியலூா் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த காவல் ஆய்வாளா் இசைவாணி தலைமையிலான காவல் துறையினா், மோசடியில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்டம், காட்டாதுறை, கல்குளத்தைச் சோ்ந்த முகமது அலி மகன் அசாரை (36) கன்னியாகுமரி சென்று புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கைப்பேசிகள், 3 சிம்காா்டுகள், வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் காா்டு, பென்டிரைவ், ரூ.2700 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

