தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டம், ஏலக்குறிச்சி, தென்னூா், வரதராஜன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா வியாழக்கிழமை அதிகாலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இயேசு பெருமான் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் விழாவாக கிறிஸ்தவா்களால் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னரே கிறிஸ்தவா்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களையும், குடில்களையும் அமைத்திருந்தனா்.
கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.
அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை தேவாலயம், கூவத்தூா் புனித அந்தோனியாா் ஆலயம், பட்டிணங்குறிச்சி புனித லூா்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தையா்கள் வழங்கினா். கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா்.
