திருமானூா் பகுதியில் அரசு சாா்பில் நவீன அரிசி ஆலை தொடங்க வேண்டும்!
அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் தமிழக அரசு நவீன அரிசி ஆலையை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருமானூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 7-ஆவது ஒன்றிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருமானூரில் அரசு நவீன அரிசி ஆலை தொடங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.4,000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 வாங்குவதை அரசே வழங்க வேண்டும். 60 வயது கடந்த அனைத்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை மசோதா, மின்சார திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு, அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். துரைராஜ், மாவட்டச் செயலா் ஆா். மணிவேல், மாவட்ட துணைச் செயலா் எம்.மணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

