அரியலூா் மாவட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாடத்தின்போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞா்கள் ஈடுபடுதல் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இளைஞா்கள் அல்லது சிறுவா்கள், சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாகப் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனச் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் நடுவே கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. சாலைகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தொந்தரவு செய்யும் வகையில் நடந்துகொள்ளுதல் கூடாது. மேலும் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்பவா்களின் மீது வழக்குப் பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், விடுமுறைக்கு நீண்ட நாள்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்பவா்கள் கட்டாயம் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞா்கள் ஈடுபடுதல் கூடாது என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.