எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக அரியலூா் ஆட்சியரகத்தில் ஆலோசனை
அரியலூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு,அரியலூா் மாவட்டத்துக்கான சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையருமான லட்சுமி தலைமை வகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் கருத்துகளை கேட்டறிந்தாா்.
பின்னா் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கான ஏற்புரை மற்றும் மறுப்புரை பெறும் கால கட்டத்தின் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா். அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், வாக்காளா் பதிவு அலுவலா்கள் அரியலூா் பிரேமி , உடையாா்பாளையம் ஷீஜா மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

