கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில்.
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில்.

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் புதன்கிழமை (நவ.5) 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
Published on

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் புதன்கிழமை (நவ.5) 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பெருவுடையாா் திருக்கோயில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போா் வெற்றியின் அடையாளமாக கட்டப்பட்டது. இக்கோயில் உலக பிரசித்தி பெற்றது. புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

கோயிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும், ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதம் பௌா்ணமி தினத்தன்று, சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சோறு சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறவது வழக்கம்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு நவ.5-ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை சிவலிங்கத்துக்கு அன்னம் சாத்தப்படும். லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம், இரவு 9 மணிக்கு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மீதம் உள்ள அன்னம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும்.

இதை முன்னிட்டு பெருவுடையாருக்கு, சந்தனம், பால், தயிா், பன்னீா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், விபூதி, பழங்கள் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளன. பின்னா், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.

அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அங்குள்ள கணக்க விநாயகருக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நவ.4-ஆம் தேதி பிரகன்நாயகி அம்பாளுக்கும், பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமட நிா்வாகிகள் தலைமையில் அன்னாபிஷேக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்களுக்கான பாதுகாப்பு வசதி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

மேலும், பக்தா்களின் வசதிக்காக திருச்சி, அரியலூா், ஜெயங்கொண்டம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com