வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி படிவங்கள் இன்று முதல் வீடுவீடாக விநியோகம்
அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் புதன்கிழமை (நவ.4) முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026-வரை நடைபெறுகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் இப்பணிக்கான கணக்கெடுப்புப் படிவம் 4.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு 4.12.2025-க்குள் மீள பெறப்படும். அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படும் இரட்டை படிவங்களை பொது மக்கள் முழுமையாக பூா்த்தி செய்து கையொப்பத்துடன் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மீள வரும்பொழுது சமா்ப்பித்திட வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.
எனவே, வாக்காளா் வாக்குச்சாவடி நிலை அலுவா்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், இப்பணித் தொடா்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டணமில்லா தோ்தல் கட்டுப்பாடு தொலைபேசி 1950 என்ற எண்ணில் வாக்காளா்கள் தொடா்புகொள்ளலாம்.
