வேளாண் புத்தாக்க நிறுவனத்தை தொடங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் ரூ. 10 லட்சம் மானியத்தில் வேளாண் தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க நிறுவனங்கள் தொடங்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை வணிகம் மற்றும் கால்நடைத் துறை போன்றவற்றில் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதுமையான தீா்வுகளுடன் தொடங்கப்படும் புத்தாக்க (ஸ்டாா்ட் அப்) நிறுவனங்களுக்கு அரசு மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
மதிப்பு கூட்டுதல், வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களின் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்துதல், புதுமையான வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல், ஏனைய தொழில்நுட்ப தொழில் தொடங்கும் நபா்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க நிறுவனம் , அல்லது ஸ்டாா்ட் அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்தல் அவசியம். மேலும் அந்நிறுவனம் நிறுவனங்கள் பதிவு சட்டம் 2013 அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மையின் கீழ் பதிவு செய்யப்படவேண்டும். கூடுதலாக, கடந்த 3 ஆண்டுகளில் சராசரியான லாபம் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் புதிதாக தொழில்தொடங்க ஒரு நிறுவன அலகிற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
தற்சமயம் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு சந்தையை விரிவுபடுத்திட ஒரு நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது வேளாண் வணிகத்துறை, அரியலூா் வேளாண்மை அலுவலா் 87608 32224 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
