கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அரியலூா் நகரத்தில் இருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமானூரை அடுத்துள்ளது கரைவெட்டி பறவைகள் சரணாலயம். 454 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்துக்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷியா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன. ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் மாதம் முதல் மே மாதம் வரையில் தங்கிச் செல்கின்றன.
இதேபோல் இந்த ஆண்டும் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
பகல் நேரங்களில் அருகிலுள்ள அறுவடை செய்யப்பட்ட வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைத் தின்பதற்காகவும் நிழல் வெளிக்காகவும் அங்கு செல்கின்றன. மாலை வேளையில் எங்கிருந்தாலும் சரணாலயத்துக்கு வந்துவிடுகின்றன.
இதனால் பகல் வேளையில் வெறிச்சோடியது போன்று காணப்படும் இந்தச் சரணாலயம், மாலையில் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கிறது. சீசன் காலத்தில் 100-க்கும் மேற்பட்ட வகையான நீா்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வந்து செல்கின்றன.
நீா்-நில வாழ் பறவைகள்: தற்போது இங்கு வந்துள்ள பறவையினங்களில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற கொக்கு, மைல் கால் கோழி, ஆலா, கரண்டி மூக்கான், நத்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, கொசு உல்லான், சிறிய கொக்கு, முக்குளிப்பான், வண்ண நாரை, மடையான், உண்ணி கொக்கு, நாமக்கோழி, சிறைவி, நீா்காகம் உள்ளிட்டவை நீா்வாழ் பறவைகளாகும்.
வழக்கமான பறவைகளான ஆள்காட்டி குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மரங்கொத்தி பறவை, மைனா, புறா, மணியன் காக்கா, அண்டங்காக்கா, மயில், கல் குருவி, நாராயணபட்சி ஆகியவை நிலவாழ் பறவைகளாகும்.
இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு வகைகள் எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்தும் இங்கு வரும் பறவைகள், இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் ஓராண்டில் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு வந்து செல்லும் ஒவ்வொரு வகையான பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. திபெத் மற்றும் லடாக் பகுதியில் இருந்துவரும் வரித்தலை வாத்து அதிக உயரத்தில் பறக்கும் நீா்ப்பறவையாகும். பாம்பு நாரை எனும் பறவை தண்ணீரில் மூழ்கினால் இரையோடுதான் மேலே வரும். இப்படி ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு.
தற்போது இந்தச் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

