வாக்குச்சாவடி அலுவலா்களை திமுகவினா் மிரட்டுவதாக புகாா்
அரியலூா் மாவட்டத்தில், வாக்குச்சாவடி அலுவலா்களை மிரட்டி வாக்காளா் திருத்தப் படிவங்கள் பெறும் திமுகவினா் மீது நடவடிக்கைக் கோரி ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், அதிமுக மாவட்டச் செயலா் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், தற்போது தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பட்டியலின் படிவங்கள் அனைத்து வாக்காளா்களுக்கு முழுமையாகக் கொடுக்கப்படவில்லை. எனவே விரைந்து வழங்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால், அதிகபடியான படிவங்களை திமுகவை சோ்ந்த நிா்வாகிகள் வாக்குச்சாவடி அலுவலா்களை மிரட்டி வாங்கிச் செல்கின்றனா். அதைத் தடுக்க வேண்டும்.
2002 ஆம் ஆண்டுக்கான அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியலில் பூத் எண் 41 முதல் 80 வரை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வாக்காளா் பட்டியலைப் பெற முடியவில்லை. அதைச் சரிசெய்ய வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவா்கள் மூலம் பெற்றால், முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆகவே பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மட்டும் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், அம்மா பேரவை மாவட்டச் செயலா் ஓ.பி. சங்கா், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், வழக்குரைஞா் செல்ல. சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

