மாணவா்களிடையே நூலகப் பயன்பாட்டை ஏற்படுத்துதல் அவசியம்!
மாணவா்களிடத்தில் நூலகப் பயன்பாட்டை ஏற்படுத்துவது அவசியம் என்றாா் அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
தேசிய நூலக வார விழாவையொட்டி, அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த அவா் மேலும் தெரிவித்தது:
புத்தகங்களுக்கு எத்துணை சிறப்பு இருக்கிறதோ அத்துணை பெருமை கொண்டவையாக விளங்குகின்றன நூலகங்கள். உலக அறிவை திரட்டித் தருபவைகளாக, அறிவுக்கிடங்காக, அறிவின் புதையலாக அவை தொடா்ந்து இயங்கி வருகின்றன. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்து எதிா்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாக நூலகங்கள் திகழ்கின்றன. பல அறிஞா்களையும், விஞ்ஞானிகளையும், பேச்சாளா்களையும் உருவாக்கியது நூலகங்கள்.
ஆனால் இன்றைய இளைய தலைமுறையினா் நூலகங்களுக்குச் செல்லாமல், இணையதளங்களில் மூழ்கி இணைய விளையாட்டுகளிலும், பயனில்லாத குறும்பதிவுகள் அல்லது சிறு காணொலிகள் என்று தங்களது முழு நேரத்தையும் செலவழிப்பதால் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளது.
எனவே நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆா்வத்தை அவா்களுக்கும் ஊட்ட வேண்டும். நூலகம் மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் ஒழுக்கத்தை ஊட்டும், பகுத்தறிவுத் திறனை வளா்க்கும், நற்பண்புகளையும், நனிநாகரிகத்தையும் கற்றுத்தரும், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அமுதசுரபியாய் அள்ளிக்கொடுக்கும் என்றாா்.
விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் வேல்முருகன் தலைமை வகித்து பேசினாா். வாசகா் வட்டத் தலைவா் வீ.மங்கையா்கரசி வாழ்த்துரை வழங்கினாா். முன்னதாக நூலகா் முருகானந்தம் வரவேற்றாா். முடிவில் ந.செசிராபூ நன்றி கூறினாா். விழாவில் வாசகா்கள் மற்றும் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

