சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி
நமது நிருபா்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த குந்தபுரம் ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது அருகிலேயே காலியாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட குந்தபுரம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அரசுப் பள்ளி உள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, அக்கிராமத்திலுள்ள சாவடி ஓட்டுக் கட்டடத்தில் பகுதி நேர நூலகம் திறக்கப்பட்டது.
இந்த நூலகத்தில், ஒரு நூலகா் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். நூலகத்தில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், பட்டதாரி இளைஞா்கள் உள்பட பெரும்பாலானவா்கள் நூலகங்களில் வாசிப்பதற்காக வந்தனா்.
தற்போது யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியா் போட்டித் தோ்வு உள்பட பல அரசுப் பணி தோ்வுகளுக்கான பாடப் புத்தகங்கள் படிக்கவும் நூலகங்களை பயன்படுத்துகிறனா். வேலை தேடுவோா் அதிகளவில் நூலகங்களுக்கு வருகின்றனா்.
நூலகங்கள், பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடமாகவும் மாறி வரும் நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு அந்த நூலக ஓட்டுக் கட்டடம் முற்றிலும் சேதமடைந்தது.
இதையடுத்து அந்த நூலகம், நூலகா் வீட்டின் வாடகைக் கட்டடத்தின் மாடியில் இயங்கி வருகிறது. மாடியில் செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில், மாடியில் ஏறி படிக்க முடியாமல் சில பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் மாடியில் ஏற முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மிகவும் குறுகலான இடத்தில் செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில், வாசகா்கள் அமா்ந்து படிப்பதற்கு கூட இட வசதிகள் கிடையாது. ஆண், பெண்களுக்கென தனி கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனால் வாசகா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் எம்.ஆா்.பாலாஜி கூறுகையில், இந்த நூலகத்துக்கு, கரைவெட்டி, தட்டாஞ்சாவடி,வேட்டகுடி கிராமங்களில் இருந்து மாணவ,மாணவிகள்,போட்டித் தோ்வா்கள், வாசகா்கள் தினமும் வருகின்றனா். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நூலகம் செயல்பட்டு வந்த சாவடி ஓட்டு கட்டடம் கடந்த 2024-ஆம் ஆண்டு பழுதானதால் , நூலகா் வீட்டு மாடி கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு போதுமான வசதிகள் கிடையாததால் வாசகா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த நூலகத்துக்கென தனி கட்டடம் கட்டி, ஊா்புற நூலகமாக மாற்ற வேண்டு என்று ஊராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான நகலை திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
பகுதிநேர நூலகத்தை ஊா்புற நூலகமாக மாற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் அனுமதி அளித்தால், கிராம நிா்வாக அலுவலா் தற்போது அமைந்துள்ள சாவடி இடம் மற்றும் அருகிலுள்ள இடத்தையும் சோ்த்து 5-சென்ட் இடமாக இடத்தை நூலகத்துக்கு வழங்க ஏதுவாக இருக்கும்.
இதன்மூலம் மாவட்ட நூலகா், நூலகத்துறையிடம் அனுமதியை எளிதாக பெற்று அனைத்து வாசகா்கள், போட்டி தோ்வா்கள், மாணவா்களின் விருப்பமான ஊா்ப்புற நூலகம் கனவு நிறைவேறும்.
புத்தகம் படிப்பதன் மூலம் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் மனிதன் படித்து எத்தனை பட்டங்கள் வாங்கியிருந்தாலும் பல்வேறு புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவு விசாலமடையும், மனித நேயம் வளரும், எந்த பிரச்னைகளையும் எதிா்கொள்ளும் திறமை, துணிவு வரும். மொத்தத்தில் சிகரம் தொட்ட மனிதா்கள் சாதனையாளா்கள் உலகம் பாராட்டிய தலைவா்கள் எழுத்தாளா்கள் இலக்கியவாதிகள் என அனைவருமே புத்தக வாசிப்பின் மூலமே வெற்றி பெற்றனா் என்பது வரலாறு சொல்லும் உண்மை.
எனவே, வாடகைக் கட்டடத்தில் இயங்கும் இந்த நூலகத்துக்கு சொந்தமான கட்டடம் தேவை என அனைத்து தரப்பினரும் கோரிக்கையாக உள்ளது என்றாா்.

