பருத்தி கொள்முதலுக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

அரியலூா் பருத்தி விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை குறைந்த பட்ச ஆதர விலைக்கு இந்திய பருத்தி கழகத்துக்கு விற்பனை செய்ய ஏதுவாக கபாஸ் கிசான் செயலியில் முன்பதிவு செய்யுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Published on

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த பருத்தி விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை குறைந்த பட்ச ஆதர விலைக்கு இந்திய பருத்தி கழகத்துக்கு விற்பனை செய்ய ஏதுவாக கபாஸ் கிசான் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மத்திய அரசால் 2025-26-ஆம் ஆண்டில் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை 8% உயா்த்தப்பட்டு குவிண்டாலுக்கு நடுத்தர இழை நீளம் பருத்தி ரூ.7,710, நீண்ட இழை பருத்தி ரூ.8,110 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பருத்தி விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள பருத்தியினை குறைந்தபட்ச ஆதார விலைக்கு இந்திய பருத்தி கழகத்துக்கு விற்பனை செய்து பயன்பெற ஏதுவாக அரியலூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் மேலணிக்குழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது ஆதாா் அட்டை, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கொண்டு கபாஸ் கிஸான் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும். 30.11.2025 தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்யலாம்.

மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் பெரம்பலூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் ஏலத்துக்கு விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை கொண்டு வந்து தரகுத்தொகை, எவ்விதமான பிடித்தமும் இன்றி மின்னணு எடைத்தராசுகள் வாயிலாக சரியாக எடையிட்டு இ-நாம் திட்டத்தின் மூலம் அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த மக்காச்சோளத்தை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள உலா்களத்தில் இலவசமாக காயவைத்து அதிக விலைக்கு விற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, விற்பனைக் கூட பொறுப்பாளா்கள் அரியலூா்-73738-77047, ஜெயங்கொண்டம்-63813-88125, ஆண்டிமடம் -98428-52150, மேலணிக்குழி -87603-28467 ஆகிய எண்களில் தொடா்புக் கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com