‘எஸ்.ஐ.ஆா் வாயிலாக பாஜக தோ்தலில் ஜெயித்துவிடலாம் என நினைத்தால் நடக்காது’
அரியலூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வாயிலாக தமிழகத் தோ்தலில் பாஜக ஜெயித்து விடலாம் என நினைத்தால் அது நடக்காது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய பாஜக அரசு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் அம்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. ஆனால், அக்கட்சியினா் பிரதமா் மோடியை அழைத்து வந்து விவசாயிகளை ஏமாற்றும் நாடகத்தை நடத்தி விட்டாா்கள். மோடிக்கு கோவை மக்கள் கருப்புக்கொடி காட்டி இருக்க வேண்டும். அதை மடைமாற்றும் வகையில் தேவையில்லாமல் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக மாநில உரிமைக்கு எதிராக இருக்கிற பாஜக, எஸ்ஐஆா் எனும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு தமிழகத்தில் தகுதிவாய்ந்தவா்களின் ஓட்டுரிமையை பறிக்க நினைத்தால் ஏமாந்துபோவாா்கள்.
வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கும் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாஜக ஏற்கெனவே ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேஷன் காா்டு என பலவிதங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கிறாா்கள். அதன் ஓா் அங்கம் தான் எஸ்ஐஆரும். அதனால் தான் முதல்வா் ஸ்டாலின், தொடக்கத்திலிருந்து எஸ்.ஐ.ஆரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா். நாங்களும் மிகவும் நுணுக்கமாக எஸ்ஐஆா் பணியை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில், நீண்ட நாள்களாக தங்கி இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளா்களுக்கு வாக்குரிமை மறுப்பதற்கு இல்லை. இதற்காக எஸ்.ஐ.ஆரைக் கொண்டு வந்து தங்கள் தோ்தல் வெற்றியை நிலைநாட்டலாம் என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக இடமில்லை என்றாா்.
