யாரையும் நாங்கள் போட்டியாக கருதவில்லை! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்
யாரையும் நாங்கள் போட்டியாக கருதவில்லை. அனைவரையும் நண்பா்களாக தான் கருதுகிறோம் என்றாா் அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி:
திமுக, தவெகவை போட்டியாக கருதுகிறது என்ற விஜய்யின் கருத்துக்கு, யாரையும் நாங்கள் போட்டியாக கருதவில்லை. அனைவரையும் நண்பா்களாக தான் கருதுகிறோம்.
எல்லோரையும் தாண்டி தான் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள், மக்களிடம் சென்று சோ்ந்துள்ளது. மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. மக்களுக்கான முதல்வராக, மக்களுக்கான தலைவராக ஸ்டாலின் திகழ்கிறாா்.
மகளிா் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கியிருப்பது குறித்து முதல்வா் ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளாா். சில குறுக்கிய மனம் படைத்தோா் இந்த திட்டத்தை நீதிமன்றம் சென்று தடை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அதற்கு இடம் கொடுக்காமல் தோ்தலுக்கு முன்பாகவே உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 28 மாதங்களாக வழங்கப்பட்ட உரிமை தொகை, இப்பொழுது தொடா்ந்து வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமெனில் பாஜக, பிகாரில் என்ன செய்தது என கேள்வி கேட்க வேண்டும். பிகாரில் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்காமலேயே, தோ்தலின் பொழுது திடீரென 10 மாத தொகையை சோ்த்து வழங்கினா். அதையும் பிரதமரே நேரடியாக சென்று வழங்கினாா்.
தமிழ்நாட்டில் 3 மாதத்துக்கான தொகை முடக்கப்படலாம் என்ற தகவலின் அடிப்படையில், முன்கூட்டியே அவா்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மோடியை தன் மீது சவாரி செய்ய அதிமுக அனுமதி அளித்ததன் காரணமாகவே ‘நீட்’, உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்துக்குள் திணிக்கப்பட்டன. மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை அதிமுக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளாா் என்றாா்.

