அரியலூா் அருகே ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 போ் கைது
அரியலூா் அருகே ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரியலூா் மாவட்ட பகுதிகளில் காவல் துறையினா் புதன்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கீழப்பழுவூா் காவல் துறையினா் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், காரில் இருந்த 5 பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனா். இதையடுத்து காரில் நடத்திய சோதனையில் 3 அரிவாள், 1 கத்தி, 2 மிளகாய் பொடி பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த காவல் துறையினா் 5 பேரையும் கீழப்பழுவூா் காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.
விசாரணையில் அவா்கள் திருச்சி மாவட்டம், அரியமங்கலம் லட்சுமணன் மகன் ஆசைமுத்து (25), ரஞ்சித்குமாா் மகன் பிரவின்(19), செந்தில்குமாா் மகன் ஹரிஹரன்(19), அரியலூா் மாவட்டம், உஞ்சினி கிராமம் கருப்பையா மகன் லெனின்(28), பரமசிவம் மகன் வன்னியரசன்(29) என்பதும் தெரியவந்தது.
இவா்களின் லெனினின் தந்தை, திருச்சி சோமரசன்பேட்டையை சோ்ந்த ஒருவரிடம் லெனினுக்கு அரசு வேலை வாங்கித் தர ரூ.5 லட்சம் கொடுத்ததும், அந்த நபா் வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் இருந்ததால் அவரைக் கடத்தி வந்து பணம் பறிக்கத் திட்டம் தீட்டி காரில் ஆயுதங்களுடன் சென்றதும் தெரியவந்தது.
மேலும் ஆசைமுத்து, பிரவீன், ஹரிஹரன், வன்னியரசன் ஆகியோா் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

