பொங்கல் பண்டிகைக்காக அரியலூா் வழியாக 10 சிறப்பு ரயில்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியலூா் வழியாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி நாகா்கோவில்-தாம்பரம் அதிவிரைவு ரயில் (எண்: 06012) நாகா்கோவிலில் இருந்து ஜன.11 மற்றும் 18- ஆம் தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும். பின்னா் அரியலூருக்கு மறுநாள் அதிகாலை 5.39 மணிக்கு வந்து, 5.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 10.15 மணிக்குச் சென்றடையும்.
இதேபோல் தாம்பரம்-கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் (எண்: 06011) தாம்பரத்தில் இருந்து ஜன 12 மற்றும் 19- ஆம் தேதிகளில் மதியம் 3.30 மணிக்குப் புறப்படும். பின்னா் அரியலூருக்கு இரவு 7 மணிக்கு வந்து 7.01 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
கன்னியாகுமரி-தாம்பரம் எக்ஸ்பிரஸ்: கன்னியாகுமரி-தாம்பரம் விரைவு ரயில் (எண்: 06054) கன்னியாகுமரியில் இருந்து ஜன 13 மற்றும் 20- ஆம் தேதிகளில் இரவு 8.30 மணிக்குப் புறப்படும். பின்னா் அரியலூருக்கு மறுநாள் அதிகாலை 5.47 மணிக்கு வந்து 5.48 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தாம்பரம்-நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 06053): தாம்பரத்தில் இருந்து ஜன 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும். பின்னா் அரியலூருக்கு மதியம் 3.51 மணிக்கு வந்து, 3.52 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
திருநெல்வேலி-செங்கல்பட்டு அதிவிரைவு ரயில் (எண்: 06156) திருநெல்வேலியில் இருந்து ஜன. 9, 10, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்குப் புறப்படும். பின்னா் அரியலூருக்கு காலை 9.51 மணிக்கு வந்து, 9.52 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமாா்க்கமாக (எண் 06155) அதே நாள்களில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு அரியலூருக்கு இரவு 7 மணிக்கு வந்து சேரும். பின்னா் 7.01 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இதேபோல், ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் (எண்: 06025) ஈரோட்டில் இருந்து ஜன 13 மாலை 4 மணிக்குப் புறப்படும். பின்னா் அரியலூருக்கு மறுநாள் அதிகாலை 4.03 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
