அரியலூா் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற வெங்கடாசலபதி-மஞ்சுளா தம்பதியினா்.

ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கைக் கோரி அரியலூா் ஆட்சியரகம் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

Published on

ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூரைச் சோ்ந்த தம்பதி, தங்களது வயல் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்துள்ள உறவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

ஆண்டிமடம் அடுத்த பெரியதத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலபதி(62)-மஞ்சுளா(55). இவா், வாரிசு அடிப்படையில் கிடைத்த தனது பூா்வீக சொத்தான நான்கில் ஒரு பாகத்தை மனைவி மஞ்சுளா பெயரில் எழுதி, அந்த வயலை பயன்படுத்தி வந்தாா்.

இந்நிலையில், இவரது உறவினா் சகுந்தலா, வெங்கடாசலபதி வயலின் வரப்புகளை களைத்து, உழவு செய்துள்ளாா். இதனை கேட்கச் சென்ற தம்பதியை, சகுந்தலாவும், அவரது மகன், மகள்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். மேலும், அவா்களது ஓட்டு வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையம் மற்றும் ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்த வெங்கடாசலபதி-மஞ்சுளா தம்பதியினா், அரியலூா் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

அப்போது அங்கிருந்த காவல் துறையினா், அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com