மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து சம்பவத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
கரூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: இக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பக்தர்கள், இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் பழங்காலச் சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் அழிந்துவிட்டன. இந்த சம்பவத்துக்கு முக்கியக் காரணம் இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியம்தான். இந்த விபத்து ஏதோ சதி போலத் தோன்றுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து வரும் புதன்கிழமை மீனாட்சியம்மன் கோயில் முன் இந்துமக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற மத்திய ,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களைக் கொச்சைப்படுத்தும் பிப்.14-ல் ஆபாச சுவரொட்டிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதே நாளில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு 10 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுவிக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டோரை விடுவிக்கக் கூடாது. ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரைப் போல சுறுசுறுப்பாக இருக்கும். அவர் நிச்சயம் தமிழக முதல்வராவார். அவருக்கு தார்மிக ஆதரவு தெரிவிப்போம். இன்றைய அரசியலில் உள்ள வெற்றிடத்தை அவர் நிச்சயம் நிரப்புவார் என்றார் அவர். பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.