கரூரில் மழை அதிகரிக்க விரைவில் பனை நடும் திட்டம்

கரூர் மாவட்டத்தில் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தி வரும் தென்மேற்கு பருவக்காற்றின்
Updated on
2 min read

கரூர் மாவட்டத்தில் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தி வரும் தென்மேற்கு பருவக்காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த பனை மரக்கன்றுகள் நடும் திட்டம் வனத்துறையால் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்தியா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருமழையால் மழைப்பொழிவைப் பெறுகின்றன. தமிழகம் தென்மேற்கு பருவமழையால்தான் அதிகளவில் மழைப்பொழிவைப் பெறுகிறது. ஜூன் முதல் அக். முதல் வாரம் வரை பெய்யும் மழையால்தான் தமிழகத்தில் விவசாயம் மற்றும் நீராதாரத்திற்கு தேவையான நீர் கிடைக்கிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் தொடர்ந்து வறட்சியாக, போதிய மழைப்பொழிவைப் பெற வனங்கள் அதிகளவில் இல்லாவிட்டாலும் தென்மேற்கு பருவக்காற்றின் ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்று வீசுவதால்தான் அதிகளவில் வறட்சி ஏற்படுவதாக அண்மையில் புவியியலாளர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் ஏ. அன்பு மேலும் கூறியது: கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.மி.மீ. என உள்ளது. சுமார் 900 மி.மீ.க்கு மேல் மழைப்பொழிவு கிடைத்தால்தான் விவசாயம் மற்றும் குடிநீருக்கும் உகந்ததாக இருக்கும். 
ஆனால் மழைப்பொழிவைத் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று கேரள மாநிலத்தின் பாலக்காட்டு கணவாய் வழியாக தரைக்காற்றாக கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோவில், கரூர் வரை வீசுகிறது. 
இந்தக் காற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வரை வீசும்போது ஈரப்பதத்துடன் வீசுகிறது. பின்னர் கரூரை அடையும் அது ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாக வீசுகிறது. அப்போது கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள மரங்கள் மற்றும் நிலங்களின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. இதனால்தான் ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்திற்கு மழையால் போதிய நிலத்தடி நீர் கிடைப்பதில்லை.
இந்த வறண்ட காற்றைத் தடுக்கும் வகையிம், நம் மாவட்டத்தில் உயர்ந்த மரங்கள் கிடையாது. பெரும்பாலும் வேம்பு, அரக்கு உள்ளிட்ட குட்டையான மரங்கள்தான் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களால் வறண்ட தென்மேற்கு பருவக்காற்றைத் தடுக்க முடியாது என்பதால் உயர்ந்து வளரக்கூடியதும், வறட்சியைத் தாங்கக்கூடியதுமான பனை மரங்களை நட வனத்துறை மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது. நிகழாண்டில் மட்டும் 2 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய உள்ளோம். இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் தன்னார்வலர்களிடம் கேட்டுள்ளோம். இந்த பனை மர விதைகளை ஏரிகள், குளங்களின் கரைகள், காவிரி, அமராவதி ஆற்றங்கரைகள், அரசு நிலங்கள், ஊராட்சி சாலைகள், மாநில சாலைகள் போன்ற இடங்களில் நட உள்ளோம். இதற்காக பள்ளி கல்வித்துறையும் ஒத்துழைப்பு நல்க உள்ளது.
பனை மரங்கள் வறண்ட காற்றிற்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டவை என்பதால் கூடுதல் மழைப்பொழிவு கிடைக்கும்.  மேலும் பனை மரங்கள் வளர்க்கப்படும்போது அதன் அடிப்பாகத்தில் உருவாகும் ஓலை புதருக்குள் நரிகள் தங்கும். நரிகள் தங்கும்போது அவை மயில்களை வேட்டையாடும். மயில்கள் பாம்புகளை வேட்டையாடும். இதனால் மயில்களால் பயிர்ச் சேதம் தவிர்க்கப்படும். மேலும் வறண்ட ஈரப்பதம் இல்லாத காற்றைத் தடுக்கும்போது பூக்களில் மகரந்தச் சேர்க்கை அதிகரிக்கும். இதன்மூலம் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் உருவாகி பூக்கள் இனவிருத்தியும், இயற்கை தேன் கிடைப்பதும் அதிகளவில் உருவாகும். இதன்மூலம் வேளாண்மை உற்பத்தியும் பெருகும். 
ஆண்டுக்கு கிடைக்கும் மழைப்பொழிவைக்கொண்டு நீராதாரத்தை பாதுகாக்கலாம். 
 மேலும் வனத்தின் அளவு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது கரூர் மாவட்டத்தில் 2.7 சதவீதம் மட்டுமே உள்ளது. அதிகளவில் பனை விதை நடும்போது வனத்தின் அளவும் சராசரியாக உயரும். இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படும். அதற்காகத்தான் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். ஊர்கூடித் தேர் இழுப்பது போல இந்த பணியில் மாவட்ட நிர்வாகம் வனத்துறையோடு கைகோத்து செயல்பட முடிவு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்தப்பணியில் மும்முரம் காட்டி வருகிறார். எனவே இதை வெற்றிகரமாக இன்னும் ஓராண்டிற்குள் செய்து முடிப்போம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com