வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-ஆம் கட்ட பணி ஒதுக்கீடு
By DIN | Published On : 17th April 2019 05:31 AM | Last Updated : 17th April 2019 05:31 AM | அ+அ அ- |

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்குசாவடி வாரியாக பணி ஒதுக்கீடு மூன்றாவது முறையாக கணினி மூலம் குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அலுவலர்கள், நியமிக்கப்படுவார்கள். அதனடிப்படையில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையமும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நான்கு மாதிரி வாக்குச்சாவடி மையமும், என மொத்தம் உள்ள 1,031 வாக்குச்சாவடிகள் மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 4,181 நபர்கள் பணிபுரிய உள்ளார்கள். இதுதவிர கூடுதலாக 835 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 5,016 நபர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான மூன்றாம் கட்ட கணினி முறையிலான குலுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன், தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரசாந்த் குமார், தேர்தல் செலவினப்பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் குலுக்கலை நடத்தினார்.
அதனடிப்படையில் 4,181 நபர்களுக்கும் அவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என்ற கணினி முறையிலான குலுக்கல் நடைபெற்றது. இது தொடர்பான ஆணைகள் மூடி முத்திரையிட்ட உறையிலிட்டு சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
புதன்கிழமை நடைபெற உள்ள கடைசிக்கட்ட பயிற்சி வகுப்பில் முத்திரையிடப்பட்ட உறை பிரிக்கப்பட்டு ஆணை வழங்கப்படவுள்ளது. இதன் பிறகே வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற அலுவலர்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என்பது தெரியவரும்.
மேலும், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 3,439 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 1,552 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,775 வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களும் தயார் நிலையில் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணமூர்த்தி (கரூர்), மல்லிகா (கிஷ்ணராயபுரம்) மீனாட்சி (அரவக்குறிச்சி), தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...