வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
By DIN | Published On : 26th April 2019 05:20 AM | Last Updated : 26th April 2019 05:20 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணிஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் மொத்தம் 2,05,273 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 250 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்று பேர் நியமிக்கப்படுவர். 1,400-க்குமேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் இதர அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.
அதனடிப்படையில் மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடிகளிலும் பணிபுரியவுள்ள 1,218 பேருக்கு கணினி முறையில் குலுக்கல் செய்து பணி ஒதுக்கீடு செய்வதற்கான நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன் கணினி முறையில் குலுக்கலை நடத்தினார்.
அதனடிப்படையில் 1,218 பேருக்கும் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவுள்ளது.பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்களின் மூலம் பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் முதற்கட்டப் பயிற்சி வகுப்பு வரும் 28-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) மு. மீனாட்சி, துணை ஆட்சியர்கள் கண்ணன், கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து கரூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.