பசுபதிபாளையம் மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு வழிபாடு
By DIN | Published On : 22nd December 2019 11:09 PM | Last Updated : 22nd December 2019 11:09 PM | அ+அ அ- |

பசுபதிபாளையம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவிளக்கு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் அடுத்த க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் பெரியநடுப்பாளையத்தில் சின்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இது கிராம மக்களுக்கு முக்கிய கோயிலாகும். ஆண்டுதோறும் நடைபெறும் இக்கோயில் திருவிழா கடந்த 8ஆம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சனிக்கிழமை பெரியநடுப்பாளையம் கோயிலில் இருந்து சின்னமாரியம்மன் பல்லக்கில் புன்னை வனநாதா் சுவாமி, வரதராஜ பெருமாள் ஆகிய கோயில்கள் வழியாக ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு புன்னம்பசுபதிபாளையம் விநாயகா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடா்ந்து விநாயகா் கோயிலில் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, பக்தா்களால் மாவிளக்கு வழிபாடு செய்யப்பட்டது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீா்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் செய்தனா்.
பின்னா் மாலையில் பொங்கல் வைத்து, ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சோ்த்து படையலிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாரியம்மனை ஊா்வலமாக எடுத்து வந்தனா். இதையடுத்து மஞ்சள் நீா் விளையாட்டு, இரவு வாண வேடிக்கை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...