47 ஆண்டுகளுக்குப் பிறகு கொக்கம்பட்டி கோயிலில் மாடுகள் மாலை தாண்டும் விழா
By DIN | Published On : 03rd July 2019 09:11 AM | Last Updated : 03rd July 2019 09:11 AM | அ+அ அ- |

கரூர் அருகே கொக்கம்பட்டியில் உள்ள வைரம்மாள், பாலகேத்து, பெத்தகேத்து கோயிலில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கோயிலில் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இதில், போட்டியாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூரை அடுத்த அப்பிபாளையம் கொக்கம்பட்டியில் கம்பளத்து நாயக்கர்களுக்கு சொந்தமான வைரம்மாள் மற்றும் பத்தாம்பட்டி பாலகேத்து, பெத்தகேத்து ஆகிய கோயில்களில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மாடுகள் மாலை தாண்டும் விழா கடந்த மாதம் 17-ஆம் தேதி பழம் போடுதல் எனும் காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது.
தொடர்ந்து 15 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து நாள்தோறும் தேவராட்டம், ஒயிலாட்டம் ஆடி சுவாமி வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கொக்கம்பட்டியில் உள்ள வைரம்மாள் கோயிலில் இருந்து முப்பாட்டுக்கூடை மாலை கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணிவரை சந்திப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து பிற்பகல் 4 மணியளவில் எருதுகள் ஓட்டம் எனும் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. முன்னதாக மாடுகள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, தாரை, தப்பட்டை முழங்க, தேவராட்டத்துடன் கோயிலின் எதிரே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள துத்திகொம்பு எல்லை கல் சாம்கோயிலுக்கு மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டன.
அங்கு மாடுகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மாடுகள் ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சந்தைகளைச் சேர்ந்த மாடுகள் பங்கேற்றன. மாடுகளை பக்தர்கள் விரட்டிக்கொண்டு, கோயில் முன்பு அமைக்கப்பட்ட மாலை நுழைவுவாயில் பகுதிக்கு ஓடி வந்தனர்.
முதல் பரிசை திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டு நாயக்கன் மந்தையைச் சேர்ந்த மாடு முதல் பரிசையும், கரூர் கோடங்கிப்பட்டி மந்தையைச் சேர்ந்த மாடுக்கு இரண்டாம் பரிசும், சேமங்கலம் அய்யாச்சாமி மந்தையைச் சேர்ந்த மாடுக்கு மூன்றாம்பரிசும் வழங்கப்பட்டன. பரிசாக வாழைப்பழம், தேங்காய் அடங்கிய பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவில், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் முக்கியஸ்தர்கள் ரவி, சின்னுசாமி, கரூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியமூர்த்தி, கந்தசாமி, சின்னுசாமி, பரமராஜ், கோபால், பழனிசாமி மற்றும் மா.சாமியப்பன், முத்துசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.