சுடச்சுட

  

  தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க. ஸ்டாலின் 

  By DIN  |   Published on : 14th June 2019 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜியையும், கரூர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செ.ஜோதிமணியையும் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர், பள்ளபட்டி பேருந்து நிறுத்தம், வேலாயுதம்பாளையம் நொய்யல் குறுக்கு சாலை, பவித்திரம் ஜெயந்தி நகர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.  தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் 14 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.10,000 வீதம் வழங்கிய அவர், அங்கு பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த இலவச தையல் பயிற்சி மையத்தைத் தொடக்கி வைத்தார். பின்னர் பள்ளபட்டி நகர திமுக சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அப்பகுதியினர் பள்ளபட்டி உரூஸ் மைதானம் அருகே நங்காஞ்சி ஆற்றின் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர். முன்னதாக அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர் பகுதி மற்றும் பவித்திரம் ஜெயந்தி நகரில் நடைபெற்ற திண்ணை பிரசாரத்தின்போது,  வாக்காளர்கள் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:  அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என மக்கள் கூறுகிறார்கள். நிச்சயம் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதில் நாம் தான் வெற்றி பெறுவோம். நம் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குடிநீர், கழிவுநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவார்கள். விரைவில் ஆட்சி மாற்றமும் வரப்போகிறது. நீங்கள் நினைக்கும் அனைத்து நலத்திட்டங்களும் உங்களுக்கு வந்து சேரும் என்றார்.
  நிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவைதொகுதி உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, கரூர் எம்பி. செ.ஜோதிமணி, திமுக நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர்ராஜேந்திரன், குளித்தலை எம்எல்ஏ ராமர், க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai